மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முதலாவது அபிவிருத்திக்குழு கூட்டம்
மட்டக்களப்பு (Batticaloa)- மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய அரசாங்கத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது பிரதேச செயலாளர் வி.வாசுதேவனின் ஒழுங்கமைப்பில் அபிவிருத்திக்குழுவின் தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் நேற்று (27) நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
வேலைத்திட்டங்கள்
குறிப்பாக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மக்களின் தேவையினை முழுமையாக நிறைவேற்றுவதாக இருப்பதுடன் மக்களின் பணம் வீண்விரயமாக்கப்படாமல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் இங்கு வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் வைத்தியசாலையின் குறைபாடுகள் மற்றும் அங்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள், வைத்தியசாலையின் பரப்பளவினை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்தல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் எம்.ஆர்.ஐ ஸ்கானர் உட்பட அவசியமான இயந்திரங்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ள நிலையில் அவசர தேவை கருதி அவற்றினை முன்னிலை அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
மக்களுக்கான பணி
அத்தோடு, மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உட்பட அதன் செயற்பாடுகள் ஆராயப்பட்டதுடன் மேலும் வினைத்திறனாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மாநகரசபையின் ஆணையாளரினால் உறுதியளிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அரச திணைக்களங்களின் ஒத்துழைப்பினையும் இதன்போது கோரியிருந்தார்.
மழை காலங்களில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் ஏற்படும் வெள்ள நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அதற்கு முன்பாக வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வடிகான்களை சீரமைத்தல் தொடர்பாகவும் எதிர்காலத்தில் வெள்ள நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
அத்துடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் தொடர்ந்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொது அமைப்புகளும் இணைந்து செயற்பட்டு மக்களுக்கான பணியை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம், உட்பட அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
