பிரித்தானியாவில் சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்கள்! இன்று மட்டும் 1,820 பேர் பலி
பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 1820 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் கொரோனாவிற்கு பலியானவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.
இந்த எண்ணிக்கை நேற்று பதிவான 1,610 மரணங்களை விட அதிகமாகும். தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, கொரோனா காரணமாக பிரித்தானியாவில் மொத்தம் 93,290 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 11ம் திகதி 1,085 பேரும், ஜனவரி 13ம் திகதி 1,077 பேரும் கொரோனாவிற்கு பலியாகியிருந்தனர். தொற்று நோய் பரவ ஆரம்பித்த கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி 1,073 பேர் கொரோனாவிற்கு பலியாகியிருந்தனர்.
தற்போதைய நிலவரப்படி பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,505,754 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், எதிர்வரும் நாட்களில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியா ஐந்தாவது இடத்தில் இருக்கின்றது. இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தடுப்பூசி திட்டத்தின் புள்ளிவிவரங்களுக்கு அமைய மேலும் 343,163 பேருக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,609,740 ஆக உயர்ந்துள்ளது.