மட்டக்களப்பில் 18 பேருக்கு டெங்கு நோய்த் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலுள்ள கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே பொதுமக்கள் வீடுகள் மற்றும் தமது காணி வெற்று காணிகளை துப்பரவு செய்யுமாறு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பணிப்பாளர் வைத்தியர் இளைதம்பி உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு நகர்பகுதியில் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளான கொக்குவில் மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் உள்ள வீடுகளை சோதனையிடும் நடவடிக்கை ஒன்றை நேற்று (5.3.2026) மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் பொலிஸார் மற்றும் மாநகரசபை, கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் ஒன்றிணைந்து மேற்கொண்டனர்.
டெங்கு நோய் தாக்கம்
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக மழை பெய்த காரணமாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதற்கமைய கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் ஒவ்வொரு நாளும் 3 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகி வருகின்றதுடன் கொக்குவில் பிரதேசத்தில் 12 டெங்கு நோயாளர்களும், கோட்டமுனை பகுதியில் 6 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
குடம்பிகளை அகற்றும் பணி
எனவே தாக்கத்துக்கு உள்ளானவர்களின் பகுதிகளில் டெங்கு நுளம்பு குடம்பிகளை அகற்றும் பணியை முன்னெடுக்கும் நடவடிக்கை ஒன்றை எடுத்து வருகின்றோம்.

டெங்கு நுளம்பை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரமுடியும் என்பதுடன் சிக்கன் கூனியா நோயாளர்களும் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளனர்.அதுவும் நுளம்பால் பரவக் கூடியது எனத் தெரிவித்துள்ளார்.



