1700 சம்பள அதிகரிப்புக்கு 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம்
தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்ளத்தை 1700 ரூபாயாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் தலைவர்களுடன் இன்று (10) கண்டி கரலிய மண்டபத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை சம்பள நிர்ணயச் சபையை அழைத்துச் பேசி அந்த தீர்மானத்தை செயற்படுத்தத் தேவையான சட்டங்களை கொண்டுவர தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சேமலாப நிதி
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமலிருக்கும் சேமலாப நிதியை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை அடுத்த வருடத்திலிருந்து முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
"கடந்த இரண்டு வருடங்களில் இந்த நாட்டு மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எப்படியோ தற்போது நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் முழுமையாகத் தீர்க்கப்படாவிட்டாலும், மக்களுக்கு பெருமளவு நிவாரணங்களை வழங்க முடிந்துள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டை விட மக்கள் சுமூகமாக வாழும் நிலைமை உருவாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே எம்மால் அவ்வாறானதொரு நிலையை உருவாக்க முடிந்தது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |