கிளிநொச்சியில் 24 மணிநேரத்தில் 17 பேர் கைது
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று முன் தினம் தொடக்கம் நேற்று வரையான 24 மணிநேர காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைவாக ஊரியான், முரசுமோட்டை, உமையாள்புரம், உருத்திரபுரம், திருவையாறு பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுக்கும் நோக்கில் கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 17 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 8 உழவு இயந்திரங்களும், 9 டிப்பர்களும் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.