நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள்
நாட்டில் பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் 1,650 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
77ஆவது சுதந்திர தின விழா மற்றும் ஒத்திகை நடவடிக்கைகளை முன்னிட்டு இவ்வாறு பொலிஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒத்திகை
இதேவேளை சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகைக்கு தயாராகும் வகையில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் நேற்று சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தபட்டுள்ளது.
மேலும் போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் நிகழ்வை எளிதாக்கும் வகையில் சிறப்பு போக்குவரத்து திட்டமும் நடைமுறையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ அணிவகுப்பின் போது ஆயுதம் ஏந்திய வாகனங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்புகளில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும்.
இதேவேளை இந்த ஆண்டு நிகழ்வில் விமான காட்சிகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.