மட்டக்களப்பில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி - குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 16 வயது சிறுமி ஒருவரை 2015ஆம் ஆண்டு தவறான நடத்தைக்கு உட்படுத்திய சிறுமியினுடைய சகோதரனின் கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபருக்கு 5 ஆயிரம் ரூபா அபராதமும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் நேற்று(16.10.2026) தீர்ப்பளித்துள்ளார்.
தண்டனை தீர்ப்பு வழங்கும் திகதி
குறித்த பிரதேசம் ஒன்றினைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2015 ஜனவரி 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 31ஆம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் மாங்கேணி பிரதேசத்தில் வைத்து தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் சகோதரியின் கணவர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸாராால் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் 2023ஆம் ஆண்டு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி..தர்சிகா ஆகியோர் முன்னிலையாகி வாதாடி வந்தனர்.
குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் செப்டம்பர் 18ஆம் திகதி மன்றில் இனங்காணப்பட்டு நேற்று(16) தண்டனை தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.