15 வயது சிறுமி விற்பனை விவகாரம்! அணிவகுப்பில் இருவர் அடையாளம்
15 வயதான சிறுமி விற்பனை விவகாரத்தில் அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் கப்பல் நிறுவனத்தின் கப்டனும் உதவி கப்டனும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் குறித்த சிறுமியால் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.
அடையாள அணிவகுப்பை அடுத்து அவர்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன என்று சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனி அபேவிக்ரம சந்தேகநபர்களைக் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவித்துள்ளார்.
தலா 25 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்தகட்ட விசாரணை அல்லது முறைப்பாட்டின் சாட்சியங்களுக்கு ஏதேனும் அழுத்தம் விடுப்பதாகப் பதிவானால், வழக்கு விசாரணை முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்கப்படுவீர்கள் என்று சந்தேகநபர்களுக்கு நீதிவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




