உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பு - 9 பேர் விடுதலை!
இலங்கையில் 2019-ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள தேவாலயங்கள், சொகுசு விடுதிகளை இலக்கு வைத்துத் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தச் சதித் திட்டம் தீட்டியமை, தாக்குதல்களுக்கு உதவி ஒத்தாசை புரிந்தமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தம குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று 7 ஆண்டுகளின் பின்னர் இத்தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நவரத்ன மாரசிங்க , இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷங்க ஆகியோர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
சுமார் 5 ஆண்டுகள் வரை நீடித்த இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தன.
குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 15 பேருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.