அத்துமீறிய 14 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஏப்ரல் 22 வரை விளக்கமறியல்
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் வடக்கு, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில், கடந்த 9ஆம் திகதி 10 கடற்றொழிலாளர்களும், அதனைத் தொடர்ந்து 14ஆம் திகதி 4 கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்களிடமிருந்து இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள், கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் வி.கனிஸ்ரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான து.டிறோசன், செ.சதீஸ்குமார் ஆகியோரால் பொறுப்பேற்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

நேற்று(17) இவ்வழக்கு நீதிவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்படி14 கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக 21 படகுகளுடன் மொத்தம் 145 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.