யாழில் நீண்டகாலத்திற்கு பின் தூர்வாரப்பட்ட 13 கேணிகள்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பணிப்பின் பேரில், பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து ரூ.5 இலட்சம் நெடுந்தீவு பிரதேச சபைக்கு வழங்கப்பட்டு, நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் காணப்பட்ட 13 கேணிகள் இயந்திர மற்றும் மனிதவலு மூலம் தூர்வாரப்பட்டுள்ளன.
நெடுந்தீவில் மழைக்காலங்களில் நீரைத் தேக்கி வைப்பதற்கும், வறட்சி காலங்களில் மக்களின் நீர்த் தேவைகளை ஓரளவுக்கு ஈடுசெய்வதற்கும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கேணிகள் நீண்டகாலமாக உரிய முறையில் பராமரிக்கப்படாமல் காணப்பட்ட நிலையில், ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஊடாக நெடுந்தீவு பிரதேச சபைக்கு நிதி வழங்கப்பட்டு தூர்வாரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நெடுந்தீவு போன்ற தீவுப் பிரதேசத்தில் நீர் வளப் பாதுகாப்பு என்பது அன்றாட வாழ்வாதாரத்துடனும் எதிர்கால நீர்ப் பாதுகாப்புடனும் நேரடியாகத் தொடர்புடையதாகும்.
நெடுந்தீவில் நன்னீர்ப் பற்றாக்குறை முக்கியமான பிரச்சினையாக இருப்பதுடன், நீண்ட வறட்சிக் காலம் மற்றும் கடல்நீர் உட்புகுதல் காரணமாக நீர்வளத்தின் மீது கூடுதல் அழுத்தம் காணப்படுவதாக முன்னைய ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த வகையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கேணி தூர்வாரும் நடவடிக்கை நெடுந்தீவின் பாரம்பரிய நீர்வளங்களைப் பாதுகாப்பதுடன், மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை அதிகளவில் சேமித்து வைப்பதற்கான உள்ளூர் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாகவும் அமைகிறது.
இத்திட்டத்தின் கீழ் நெழுவினிக் கேணி, ஒற்றைப்பனையடி கேணி, தெற்காட்டு அம்மன் கோயில் கேணி மற்றும் பெருக்கடி கேணி ஆகிய நான்கு கேணிகள் இயந்திர வலுவைப் பயன்படுத்தி தூர்வாரப்பட்டுள்ளன.
மேலும், முதலியார்குள கேணி, சாறாப்பிட்டி கேணி, கொறுவாண்டு கேணி, வெண்ணாங்கேணி வடக்கு, வெடிச்சாய் கேணி, கிழக்கு மக்கிக் குண்டு கேணி, வெல்லைக் கேணி மற்றும் ஆலமாவனப் பிள்ளையார் கோயில் கேணி ஆகிய ஒன்பது கேணிகள் மனிதவலுவைப் பயன்படுத்தி தூர்வாரப்பட்டுள்ளன.
இதன்மூலம் மொத்தம் 13 கேணிகள் தூர்வாரப்பட்டு, அவற்றின் நீர்த்தேக்கத் திறனை மேம்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவில் நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கான இந்நடவடிக்கை தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்வதுடன், எதிர்கால வறட்சிக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய நீர்வளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும்
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
இஸ்ரேலிய சுதந்திர தினத்தில் தீப்பந்தம் ஏற்றும் முதல் இந்தியர்: கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு நெதன்யாகு அழைப்பு News Lankasri