இந்தியாவில் கடும் வெப்பத்தினால் 13 பேர் பலி: அரச விருது விழாவில் சோகம்!
இந்திய மகாராஷ்டிரா மாநில அரசின் 'பூஷண் விருது' வழங்கல் விழாவின்போது ஏற்பட்ட கடும் வெப்பத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (16.04.2023) நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் இவ்விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த விழா, காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நடைபெற்றுள்ளது.
உடல்நலப் பிரச்சினை
நேற்றைய தினம் (16.04.2023) நண்பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பங்கேற்பாளர்களுக்கு திறந்தவெளியில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளதாகவும் கொட்டகைகள் எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. இதனால் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் கடும் வெப்பநிலை தாங்காமல் விழுந்துள்ளனர்.
இதில், 13 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே , (Eknath Shinde) வைத்தியசாலைக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.
5 இலட்சம் ரூபா இழப்பீடு
மேலும், இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கியுள்ளார்.
மேலும் இவ்விழாவில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உட்படப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.