பிரித்தானியாவில் மேலும் 1,295 பேர் கொரோனாவிற்கு பலி! தற்போதைய நிலை குறித்து வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 1,295 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88,590 உயர்ந்துள்ளது.
பிரித்தானியாவில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மூன்றாவது மிக உயர்ந்த நாளாந்த உயிரிழப்பு இதுவாகும்.
மேலும் 41,346 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,262 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், “கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரிப்பது நம் அனைவருக்கும் கசப்பான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என பிரித்தானிய பொது சுகாதார மருத்துவ இயக்குனர் வைத்தியர் யுவோன் டாய்ல் தெரிவித்தார்.
“நாங்கள் அடிப்படைகளை மறந்துவிடக்கூடாது, எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் வாழ்க்கை அதைப் பொறுத்தது,
மற்றவர்களிடமிருந்து இடைவெளியை பேணுங்கள். கைகளை கழுவி முகக்கவசம் அணியுங்கள்.” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 37,475 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 324,233 பேர் முதல் தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர்.
70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் முன்னணி சுகாதார பராமரிப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 15 மில்லியன் மக்களுக்கு பெப்ரவரி நடுப்பகுதியில் தடுப்பூசி வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிரதமருடன் பேசிய பிரித்தானியாவில் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி, கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அடுத்த 10 நாட்களுக்குள் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தென்கிழக்கு, கிழக்கு மற்றும் லண்டனில் ஏற்கனவே தொற்றுநோய்களின் உச்சநிலை நிகழ்ந்திருப்பதாக அவர் நம்புகிறார்,
"மரணத்தின் உச்சநிலை எதிர்காலத்தில் இருக்கும் என்று நான் அஞ்சுகிறேன், நாட்டின் சில பகுதிகளில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உச்சகட்டமாக இருக்கக்கூடும்என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்க பிரித்தானியாவின் அனைத்து பயண வழிகளையும் திங்கள்கிழமை முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்று இதனை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.