இலங்கையில் ஹெரோயினை பயன்படுத்தும் 120.000 பேர்-அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை
இலங்கையில் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்துவோர் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் இருப்பதாக தேசிய அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
சுமார் நான்கு லட்சம் பேர் கஞ்சா போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாக அபாயகரமான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சாக்கிய நாணயக்கார கூறியுள்ளார்.
புகைத்தல் மற்றும் மது அருந்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
புகைப்பிடித்தல் மற்றும் மதுபானங்களை பயன்படுத்துவோர் குறைந்து வருவதாகவும் ஐஸ் உட்பட போதைப் பொருள்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐஸ் போதைப் பொருளை பயன்படுத்துவோரில் 90 முதல் 100 வரையான நபர்களே 2022 ஆம் ஆண்டு போதையில் இருந்து விடுப்பட சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளனர்.
சிகிச்சை பெறாமலேயே பழக்கத்தை கைவிடும் ஹெரோயின் மற்றும் கஞ்சா பாவனையாளர்கள்
ஹெரோயின் மற்றும் கஞ்சாவை பயன்படுத்துவோரில் பெரும்பாலான நபர்கள் சிகிச்சைகளை பெறாமலேயே போதைப் பொருள் பாவனையை நிறுத்தி வருகின்றனர்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சையளிக்கும் புனர்வாழ்வு நிலையங்களில் சுமார் மூவாயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறவே வசதிகள் இருக்கின்றன.
வருடாந்தம் 40 ஆயிரம் பேர் புகைத்தல், மதுபானம் மற்றும் போதைப் பொருள் பழக்கத்திற்கு ஆளாகி வருவதாகவும் சாக்கிய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.



