பேஸ்புக் மூலம் விடுக்கப்பட்ட அழைப்பு: 12 இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி
அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் களியாட்டில் கலந்து கொண்ட 12 இளைஞர்கள் பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் விளம்பரம் செய்து களியாட்டு ஒன்று நடத்தப்படுவதாக சீதாவக்க சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது.
அதனையடுத்து இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப் பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களியாட்டம் இடம்பெற்ற உணவக உரிமையாளர் ஃபேஸ்புக் மூலம் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்ததாகவும், செல்லும் பாதையில் மரங்களை வெட்டிப்போட்டு உணவகத்தை மறைப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கப்பட்ட உணவுகளின் விலை
அத்துடன் களியாட்டுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு உணவக உரிமையாளர் ஏற்பாடு செய்திருந்ததாகவும், அது சாதாரண விலையை விட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களில், கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு இளைஞர்களும், பலாங்கொடை, எஹெலியகொட, அவிசாவளை, குருகல்ல போன்ற பிரதேசங்களில் வசிக்கும் 18 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |