போதைப் பொருள் குற்றச் சாட்டுக்களில் 100 பொலிஸ் அதிகாரிகள் கைது
போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை சுமார் 100 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, தெரிவித்துள்ளார்.
உவா மாகாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை தொடங்கிய நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல் அரச நிறுவனங்களுக்குள்ளும், குறிப்பாக பொலிஸ் துறையிலும் ஊடுருவியுள்ளது எனவும் நேற்று முன்தினம் 700 கிராம் போதைப்பொருளுடன் ஒருபொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் பொலிஸ் அதிகாரிகள் என்பதற்காக சட்டநடவடிக்கைகளை மறைக்கவோ தவிர்க்கவோ நாம் தயாரில்லை எனவும் அவர்களுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பல்வேறு போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை சுமார் 100 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முப்படை உறுப்பினர்களில் சிலரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பழக்கத்திற்கு தொடர்புடையவர்களாக கண்டறியப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் துறை உட்பட பிற அரச நிறுவனங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் குறித்த தகவல்கள் பொதுமக்களிடம் இருந்தால் உடனடியாக வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது கைப்பேசி 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர் News Lankasri