நாட்டை விட்டு அவசரமாக வெளியேறியுள்ள 10,000 தொழில்நுட்ப வல்லுநர்கள்! வெளியான காரணம்
பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) தலைவர் தமித் ஹெட்டிஹேவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் சுமார் 10 சதவீதமான மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரடி வேலை வாய்ப்புகள்
இலங்கை கணினி சங்கத்தின் மதிப்பீட்டின்படி, தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் 150,000 நேரடி வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும், 2021 இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் நேரடி பணியாளர்கள் சுமார் 125,000 பேர் என்றும் கூறியுள்ளார்.
நான்காவது தொழிநுட்பப் புரட்சியானது டிஜிட்டல் புரட்சி என்பதால், ஐடி பொறியியலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு நல்ல தேவை இருப்பதாகவும், இதன் காரணமாக இதுவரை சுமார் 10,000 வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொழிநுட்ப துறையில் ஒரு வருடத்திற்கு 20,000 நிபுணர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 8000 தொடக்கம் 9000 வரையான தொழில் வல்லுனர்கள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வரி உள்ளிட்ட சலுகைகளை வழங்கி அவர்களை நாட்டிலேயே நிலை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.