சட்டமா அதிபரின் சேவைக்கால நீடிப்புக்கான பணிகள் மும்மூரம்
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் ( Sanjay Rajaratnam) சேவை நீடிப்பு தொடர்பான யோசனையை அரசமைப்பு பேரவையில் தாக்கல் செய்வதில் அரசாங்கத் தலைவர்கள் மும்மூரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு தற்போது வரையில் கலவையான பதில்கள் கிடைத்துள்ள நிலையில், சேவை நீடிப்பு வழங்க எந்த சட்ட ஏற்பாடும் இல்லை என்று எதிர்க்கட்சியினர் வாதிடுகின்றனர்.
ஜனாதிபதியின் பரிந்துரை
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆலோசனை வழங்கும் சட்ட ஆலோசகர் ஒருவர் இது தொடர்பில் தமது கட்சி உயர்நீதிமன்றத்தை நாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கத் தலைவர்கள் சேவை நீடிப்புக்கு முன்னுதாரணங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னதாக சந்தன விக்கிரமரத்ன பொலிஸ் மா அதிபராக இருந்த போது, அவருக்கு இரு வாரங்களுக்கு ஒருமுறை, ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் சேவை நீடிப்பு வழங்கப்பட்டதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது போலவே சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதி பரிந்துரை செய்துள்ளார் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதில் சட்டமா அதிபர் ராஜரத்தினம் முக்கிய பங்காற்றியுள்ளார் என்றும் ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நினைவுப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |