தங்கச்சங்கிலியை கொள்ளையிட பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்
கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவரின் கழுத்தை உரிய ஆயுதத்தால் அறுத்து கொலை செய்து விட்டு, அந்த பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் ஒன்று குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் நடந்துள்ளது.
இருதெனியாய,தொழம்புஹெல என்ற பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுண்ட பெண்ணின் கணவன் வடமேல் மாகாணத்தின் அபிவிருத்தித்திட்டம் ஒன்றில் பணிப்புரிந்து வருகிறார்.
கையில் குழந்தையுடன் சென்ற பெண்
இன்று முற்பகல் பொல்பித்திகம நகருக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து விட்டு திரும்பிச் செல்லும் போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொலை செய்யப்படும் போது பெண் தனது ஒன்றரை வயது ஆண் குழந்தையை கையில் வைத்திருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இருதெனியாய தொழம்புஹெல பிரதேசத்தில் தங்கச்சங்கிலியை அறுத்த போது, முகமூடி அணிந்திருந்த சந்தேக நபரை பெண் அடையாளம் கண்டுள்ளார்.
இதனால், தப்பிப்பதற்காக சந்தேக நபர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்தி அழுத குழந்தை
இந்த சம்பவத்தை அடுத்து குழந்தை கத்தி அழும் சத்தத்தை கேட்ட அருகில் இருந்த பெண்ணொருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு, காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனினும் ஏற்கனவே பெண் இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலையை செய்து விட்டு தங்கச்சங்கிலியை அறுத்து சென்ற சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவரை கைது செய்ய தேடுதல் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.