யாழில் 6 இலட்சம் பெறுமதியான வயர்கள் திருட்டு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த 6 இலட்சம் ரூபா பெறுமதியான மின் வயர்கள் திருடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (21.04.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் முறைப்பாடு
கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழகம் யாழ். மாவட்ட ரீதியில் றேஞ்சஸ் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டிகளை மின்னொளியில் நடாத்திவருகிறது.
அந்த போட்டிகள் தற்போது அரையிறுதி போட்டி வரை நகர்ந்துள்ளதுடன் எதிர்வரும் வாரமளவில் இறுதிப் போட்டியை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நேற்றுமுன் தினம்(21) மைதானத்தில் மின்னொளிக்காக பொருத்தப்பட்டிருந்த வயர்கள் திருடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருடப்பட்டுள்ள வயர்களின் தற்போதைய சந்தை பெறுமதி சுமார் 6 இலட்சம் ரூபா என றேஞ்சஸ் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.