எரிபொருள் வரிசையில் நிற்பவர்களுக்கு எச்சரிக்கை
எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் சாதூர்யமாக பேசி கொள்ளையடிக்கும் நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொட்டாவ எரிபொருள் வரிசையில் சிக்கி ஏமாற்றப்பட்டவர் பொது மக்களை எச்சரிக்கும் வகையில் இணையத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கொட்டாவ எரிபொருள் வரிசையில் நின்ற நபரிடம் வந்து பேசி நபர் ஒருவர் தங்களிடம் டீசல் உள்ளதெனவும் ஒரு லீட்டர் 300 ரூபாய் என்ற கணக்கில் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
டீசல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமையினால் 300 ரூபாய்க்கு வழங்குவதாக கூறியதுடன், நீண்ட வரிசை காணப்பட்டமையினால் குறித்த நபர் அதனை பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.
ஏமாற்றும் நபர்
குறித்த நபரின் வாகனத்திலேயே ஹோமாகம பிரதேசத்தில் சந்தேக நபர் அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வீடு ஒன்றை காண்பித்து “இது தான் என் வீடு டீசலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அங்கு வாருங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எவ்வளவு லீற்றர் டீசல் வேண்டும் என சந்தேக நபர் வினவிய போது தனக்கு 30 லீற்றர் தேவையாக உள்ளதென பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார். எங்களிடம் 50 லீற்றர் உள்ளது. அதனை 15ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முழுமையாக பெற்றுக் கொள்ளுங்கள். டீசலின் உரிமையாளர் இராணுவத்தில் உள்ளார் அதனால் அவர் ஒன்றும் கூற மாட்டார் என சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியவுடன் சரி 10ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என கூறியுள்ளார். முதலில் டீசலை காண்பியுங்கள் தருகிறேன் என பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார். இல்லை 7ஆயிரம் ரூபாய் தாருங்கள் என கூறியுள்ளார். காண்பிக்கவில்லை என்றால் வழங்க முடியாதென பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள்
சரி நீங்கள் இந்த இடத்திலேயே இருங்கள் 5ஆயிரம் தாருங்கள் எடுத்து வருகிறேன் என சந்தேக நபர் கூறியதுடன் பலவந்தமான பணத்தையும் பெற்றுள்ளார். எனினும் அந்த நபர் அங்கிருந்து செல்வதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட நபர் புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார். பணத்துடன் சென்ற நபர் திரும்பி வரவில்லை.
அவர் போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும் பாரிய அளவிலான மக்களிடம் இதே அளவில் பணம் கொள்ளையடித்துள்ளதாகவும், அவர் காண்பிக்கும் வீடு அவருக்கு சொந்தமானதல்ல எனவும் பின்னரே தெரியவந்துள்ளது.
இதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறும் பணத்தை யாரிடமும் கொடுத்து ஏமாற வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.