அரசியல்வாதிகளின் மோசமான செயல்களை அம்பலப்படுத்தும் அதிகாரிகள்
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடு முழுவதும் இடம்பெற்ற கலவரத்தின் போது எரிக்கப்பட்ட மற்றும் அழிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பை இரட்டிப்பாக்க அல்லது மூன்று மடங்காக அதிகரிக்க அரசியல்வாதிகள் குழுவொன்று செயற்பட்டு வருகின்றது.
சில அரசியல்வாதிகள் அழிக்கப்பட்ட சொத்துக்களுக்குள் மதிப்பற்ற சொத்துக்களுக்கும் வரம்பற்ற தொகையை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், இந்த இழப்புகளை மதிப்பிடும் அதிகாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சொத்து மதிப்பு
அழிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு பதிலாக 2 வீடுகள் என மதிப்பீடு அறிக்கைகளை சமர்ப்பித்து நட்டஈடு பணம் மற்றும் வீடுகளை பெற்றுக்கொள்ள 05 அரசியல்வாதிகள் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதி ஒருவர் தனக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்து இழப்பீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அழிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இல்லாத பெறுமதியான பொருட்களின் பட்டியலை முன்வைத்து பணத்தை பெற்றுக்கொள்ள சில அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்.
போலித் தகவல்கள்
சில அரசியல்வாதிகள் தங்களுடைய வீடுகளில் பெருமளவு தங்கம், பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டதாக மதிப்பீட்டு அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளனர்
சொத்துக்களை அழித்த அரசியல்வாதிகள் சமர்ப்பித்துள்ள பல மதிப்பீட்டு அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என இந்த வழக்குகளை விசாரிக்கும் பொலிஸ் குழுக்கள் தெரிவிக்கின்றன.
இந்த அரசியல்வாதிகள் தமது அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு வரம்பற்ற இழப்பீடு பெற முன்வந்த போதிலும், அவர்கள் எவ்வாறு சொத்தை சம்பாதித்தார்கள் என்பது குறித்து எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்றும் புலனாய்வுக் குழுக்கள் கூறுகின்றன.
இதன்காரணமாக அந்த அரசியல்வாதிகள் முன்வைக்கும் சொத்துமதிப்பீட்டு அறிக்கையை ஏற்க வேண்டிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.