இலங்கையில் விஸ்வரூபம் எடுத்த மற்றொரு பிரச்சினை! என்ன செய்யப்போகிறது எரிபொருள் தட்டுப்பாடு?
இலங்கை, மைல் கணக்கில் தரித்து நிற்கின்றன வாகனங்கள். எரிபொருளின்மைதான் இதற்குக் காரணம். சில எரிபொருள் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்குகிறார்கள். பல இடங்களில் அதுவுமில்லை. பசி, உறக்கம் மறந்து வாகன சாரதிகள், விவசாயிகள் தெருவில் கிடக்கின்றனர்.
இவ்வாறு எரிபொருளுக்காகக் காத்துக் கிடப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டு எரிபொருள் நிலைய ஊழியர்களைக் கண்டபடி தாக்கும் சம்பவங்கள் கூட பதிவாகின்றன. பொறுப்பற்ற அரசைத் திட்டித்தீர்த்துவிட்டு, இப்படியாகக் கையில் அகப்படும் அப்பாவிகளைத் தாக்கித் தம் கோபம் தீர்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியுமில்லை.
இத்தகைய எரிபொருள் தட்டுப்பாடு எத்தனை நாளைக்கு நீடிக்கும், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது பற்றிய தெளிவோ, விழிப்புணர்வோ சரியான முறையில் இதுவரையில் எடுத்துச்சொல்லப்படவில்லை. வெள்ளம் வந்த பின்னர் அணையைக் கட்டுவோம் என்ற கொள்கையின் அடிப்படையில் எதிர்கொள்ளப்பட்ட கோவிட் அலைகள் நாட்டையே நிர்மூலமாக்கின.
இதிலிருந்ததாவது பாடத்தைக் கற்றுக்கொள்வார்களா என்று பார்த்தால், அதற்குரிய எந்த சமிக்ஞைகளையும் காணமுடியவில்லை. எனவே இப்பத்தியானது இலங்கை எதிர்கொள்ளும் எரிபொருள் தட்டுப்பாட்டின் விளைவை முன்னறிக்கைப்படுத்த முனைகிறது. உலகளவில் கோவிட் தாக்கத்தின் பின்னர் சுற்றுலாத்துறை மிக மோசமான சரிவைச் சந்தித்தது.
இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்நாட்டின் பொருளாதாரத்தின் முதலாவது இடத்தில் இருக்கின்ற சுற்றுலாத்துறை கோவிட்டுக்கு முன்பே படுத்துவிட்டது. அதாவது ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளது எண்ணிக்கை குறைந்துவிட்டது. கோவிட் நிலைமைகள் அதனை மேலும் மோசமாக்கின.
கோவிட் இரண்டாம் அலையின் பின்னர் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அரசு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும், உக்ரேனியர்களைத் தவிர ஏனைய நாட்டவர்கள் பெரிதளவில் ஆர்வம் காட்டவில்லை.
தற்போதும் நிலைமை அப்படியேதான் நீடிக்கிறது. சுற்றுலாவுக்கு அடுத்த நிலையில் தேயிலை ஏற்றுமதியே அதிக வருவாயை இலங்கைக்குத் தருகிறது. இரசாயன உர – மருந்து இறக்குமதி தடையுடன் தேயிலை ஏற்றுமதியும் சரிவைச் சந்தித்திருக்கிறது. இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற தைத்த ஆடை ஏற்றுமதிக்கும் தற்போது வேட்டுத் தீர்க்கப்பட்டிருக்கிறது.
எரிபொருள் தட்டுப்பாடுகளின் காரணமாக, ஆடைத் தொழிற்சாலைகள் பல இயங்க முடியாத நிலைக்குச் செல்லும். இதனால் உற்பத்திகள் குறைவடைய ஏற்றுமதியும் குறைவதற்கே வாய்ப்புள்ளது. மறுபுறமாக இலங்கையிலிருந்து தைத்த ஆடைகள், மீன் போன்றவை ஏற்றுமதி செய்யப்படும் ஐரோப்பிய நாடுகள், பயங்கரவாதத் தடைச்சட்டநீக்கத்தை இலங்கையைக் கையாளும் ஒரு கருவியாக எடுத்திருக்கின்றன.
தற்போதைய நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து இலங்கை அரசு தரும் எந்த வாக்குறுதிகளையும் நம்பாத ஐரோப்பிய ஒன்றியம், அச்சட்டத்தை நீக்கினால் மட்டுமே மேலதிக பேச்சு என்ற கணக்கில் விடாப்பிடியாக நிற்கிறது. இந்த இறுக்கமும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் இணைந்து தைத்த ஆடை ஏற்றுமதிக்குப் புதிய சவாலை ஏற்படுத்தப்போகிறது.
தென்னாசியாவிலேயே உள்ள 10 விவசாய உற்பத்திகள் மூலமே தன்னிறைவு கொள்ளக்கூடிய நாடாக இலங்கை இருந்து வந்திருக்கின்றது. வரலாற்றுக் காலம் தொட்டே இந்தப் பெருமையை இலங்கை பறைசாற்றி வந்திருக்கிறது. ஆட்சி பீடமேற்றிய அனைத்து ஆட்சியாளர்களும் விவசாய உற்பத்திக்கும், குள அமைப்புக்குமே முதன்மை கொடுத்துத் தம் குடிகளின் வாழ்வைக் குளிர்வித்து வந்திருக்கின்றனர்.
ஆனால் இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவையாக விவசாய உற்பத்திகள் நலிவடையச் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஏற்படுத்தப்பட்ட இரசாயன உர – மருந்து வகை தடைகள், இயற்கை விவசாய பெருக்கம் போன்றன ஒரே இரவில் சாத்தியப்பட முடியாதன.
அத்துடன் பல்கிப்பெருகிவிட்ட சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப விவசாயத்தின் மொத்த நில வருமானத்தையும் இயற்கை விவசாயத்திற்கு அர்ப்பணிப்பது சாத்தியமற்றதும்கூட. இவற்றைக் கணக்கிலெடுக்காது முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தோல்வியில் தொங்கிக்கொண்டிருக்க, எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளின் நிலத்தைப் பதப்படுத்த டீசல் தேவை. விதைத்த பயிர்களைக் காப்பாற்றுவதற்கு நீர் தெளிக்க மண்ணெண்ணெய் தேவை.
இந்த எரிபொருட்களை கொள்கலன்களில் தரமாட்டோம், வாகனங்களுக்கு மட்டுமே தருவோம் என அடம்பிடிக்கின்றன எரிபொருள் நிரப்பு நிலையங்கள். எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக தலையெடுத்த விவசாயமும் எரிபொருள் தட்டுப்பாட்டோடு வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளன.
எரிபொருள் தடையினால் நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் மின்வெட்டானது, உள்ள10 சிறுகைத் தொழில் உற்பத்திகளையும் பாதித்துள்ளது. சமநேரத்தில் சகலவிதமான வணிகங்களையும் பாதிப்புக்குள்ளாக்கியும் உள்ளது. இந்நிலை தொடர்ந்தால், பொருளாதார பாதிப்புகள் கிராம மட்டத்தில் ஏற்படும்.
போர்க்காலத்தில் கூட ஏற்படாத வறுமை நிலைமை இலங்கை முழுவதற்கும் பரவுவதற்கான காலம் மிக அண்மையில் வந்துவிட்டது. முன்பெல்லாம் இலங்கைக்கு நீடித்த உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பில்லை என்பார்கள். நெல்லும், மரவள்ளிக்கிழங்கும், கடலுணவுகளும் போதியளவில் கிடைப்பதனால் உணவுப் பஞ்சம் தவிர்க்கப்படும் என்பதே கணிப்பாக இருந்தது.
ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. கடந்த முறை பெரியளவில் நெல் உற்பத்தி இடம்பெறவில்லை. மரவள்ளிச் செய்கையில் யாரும் ஆர்வம் காட்டுவதுமில்லை. இந்திய, சீன மீன்பிடி முறைகளின் அத்துமீறல்களால் இலங்கையின் கடல் வளம் பாரிய அழிவைச் சந்தித்திருக்கிறது.
அதற்கெதிராகப் போராடிய இலங்கை மீனவர்கள் எவ்விதத் தீர்வு வழங்கப்படாமல் தவிக்கவிடப்பட்டுள்ளனர். இவற்றைத் தவிர்க்க அரசிடம் இருக்கும் இலகுவான வழி மியன்மார், சீனா போன்ற நாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதுதான். இறக்குமதி செய்வதற்கு டொலர் தேவை. ஆனால் நாட்டின் இன்றைய பொருளாதார சரிவிற்கு டொலர் கையிருப்பின்மைதானே பிரதான காரணம். எனவே நீடித்த உணவுப் பஞ்சம் ஒன்றிற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் உணரப்படுகின்றது.
தற்போது நாட்டில் மீண்டும் எரிவாயு, பால்மா, பனடோல் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து பொருட்கள் போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தத் தட்டுப்பாடுகளைச் சீராக்க மீண்டும் பொருட்களின் விலையேற்றத்திற்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏற்கனவே 5000 ரூபாவிற்கு ஒரு சொப்பிங் பை அளவிற்கே பொருட்களை வாங்குமளவிற்குப் பொருட்களின் விலை எகிறி பணப் பெறுமதி குறைந்திருக்கிறது.
இந்த மதிப்பிழப்பிற்கு அமைவாக இலங்கையில் அரசியல்வாதிகளைத் தவிர வேறு எந்தத் துறையினரும் வருமானம் ஈட்ட முடியாது. எனவே இவை அனைத்து இடர்களும் இணைந்து, எதிர்வரும் மாதங்களில் இந்நாடு என்றுமே சந்தித்திராத பொருளாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தப்போகின்றது. இந்த அச்சுறுத்தல்களை இனங்காணக் கூட வலுவற்ற அரசு தன் மக்களை நோக்கிச் சொல்கிறது, அரசை விமர்சிக்காதீர்கள். விமர்சிப்பவர் தம் விசுவாசிகளாகவே இருப்பினும் தூக்கியெறியப்படுவீர்கள்.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றத்தினதும், கோவிட் தாக்கத்தினதும் விளைவுதான் இது. எதிர்க்கட்சிகள் மக்களைப் பிழையாக வழிநடத்தி, குழப்பங்களை ஏற்படுத்துகின்றனர். மக்கள் யாரும் குழப்பமடையாதீர்கள். எல்லாப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் - என்ற சாரப்பட்ட செய்திகளை அரசு மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.
இன்னமும் பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் - அதற்கேற்ப முன்னாயத்தத் திட்டங்களை எதிர்கொள்ளாமல் தம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறையை மட்டுமே அரசும், அரசு சார்ந்தவர்களும் தேடிக்கொண்டிருப்பதையே உலவவிடப்படும் இச்செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.