இலங்கை பசியின் கோர முக கதை
மூதூர் நகரின் இரைச்சல் மங்கும் தூரமளவிற்குள் பிரம்மாண்டாக நிமிர்ந்து நிற்கும் குடையப்பட்ட மலையடிவாரத்தில்தான் அந்தக் கிராமம் இருக்கிறது. அகன்ற கார்ப்பெற் வீதியும், அதனை அண்மித்தாகப் பச்சைப்பசேல் வயல்வெளியும் சகாயபுரம் என்னும் பெயருடைய இந்தத் தமிழர் கிராமத்திற்கு அரண் செய்கின்றன.
சதாகாலமும் ஈரப்பதன் அதிகமுள்ள காற்றினை அள்ளிவீசிக்கொண்டிருக்கும் தாழ்வுத்தரையில் மிக நெருக்கமாக மக்கள் வாழிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்ந்து வளர்ந்த பயன்தரு – காட்டு மரங்களுக்கு நடுவி்ல் வீடுகள் குறுக்கும் நெடுக்குமாக கட்டப்பட்டுள்ளன. அங்கு வாழும் மக்களின் பொருளாதார நிலைமைகளுக்கு அமைவாக வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்படியான அந்தக் கிராமத்தினுள் நுழைபவர்களுக்குப் போர்க்கால முகாமொன்று இலகுவாக நினைவுக்கு வந்துவிடுகிறது. இத்தகைய எழில் மிகு கிராமத்திற்குள்தான் வசிக்கிறார் நாற்பத்தியிரண்டு வயதினைக் கடந்த வயிரமுத்து சாந்தி. பல நாட்கள் ஒழுங்கான உணவு உட்கொள்ளாத உடல், பசியை – துயரத்தை – ஏக்கத்தை ஒப்புவிக்கும் கண்கள், சத்தற்று சூம்பிப்போன உடற்பாகங்கள், பல வருடங்களாக எண்ணெய் எதனையும் காணாத பறட்டைத் தலையென வறுமையின் மூல வடிவமாக நம் முன் நிற்கிறார் சாந்தி.
கணவர் தகராறு
ஐந்து பிள்ளைகளின் தாயாகிய சாந்தியின் கணவர் தற்போது குடும்பத்தாரோடு இல்லை. தகராறு ஒன்றில் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்கு சென்ற அவர், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தை விட்டு எங்கேயோ சென்றுவிட்டார். சாந்தி தன் முழுப்பலத்தையும் கொடுத்தே ஐந்து பிள்ளைகளையும் வளர்த்தார்.
ஆரம்ப நாட்களில், விறகு எடுத்து விற்பது, ஆற்றில் இறால் மற்றும் மீன் பிடிப்பது என எதையாவது வேலைசெய்து ஐந்து பிள்ளைகளின் பசியினையும் ஆற்றிவந்தார். ஆனால் பிள்ளைகள் வளர அதில் கிடைக்கும் வருமானம் துளியளவும் போதவில்லை. மூத்தமகன் வீட்டை விட்டே ஓடிவிட்டான். எஞ்சிய நான்கு பிள்ளைகளையும் காப்பாற்றுவதுதான் சாந்தியின் வாழ்நாள் போராட்டமாகியது
அதுக்குப் புறவு நான் ஊருக்குள்ள இறங்கினன். பிச்சையெடுக்கிறதுதான் என்ர வேலை. ஒரு நாளைக்கு ஐநூறு ரூபா கிட்ட கிடைக்கும். அதைக்குடுத்து கிடைக்கிற அரிசி, சாமானுகள் வாங்கி பிள்ளைகளும் நானும் சாப்பிட்டு வந்தம். ஒரு நாளைக்கு ஒரு நேரம்தான் சாப்பாடு. எனக்கும் கேணியா வருத்தம். தூர இடம் நடந்துகொள்ள ஏலா. எழும்பிக்கொள்ள ஏலா. கிழம கணக்கில படுத்தபடுக்கை ஆகிடுவன்.
அந்த நேரங்களில என்ர ரெண்டாவது பெடியன்தான் எங்கயாவது போய், எதையாவது செய்து ரெண்டு பார்சல் சோறு வாங்கிவருவான். சாமம் எத்தினை மணி ஆகினாலும் அவனைப் பார்த்துக்கொண்டிருப்பம். பிள்ள எப்பிடியாவது சோறோட வந்து எங்கள எழுப்பும். இப்ப அந்தப் பிள்ளையும் என்னோட இல்லையே எனக் கூறிக்கொண்டிருந்த சாந்தி இருண்டிருந்த வானம் வெடிக்கக் கதறத் தொடங்கினார்.
வறுமை
சாந்தியின் இளைய புதல்வனுக்கு என்ன நடந்தது? இலங்கை அரசாங்கத்தின் துர் அரசியல்– பொருளாதார வழிநடத்தல்களால் நாடு வறுமையின் பிடியி்ல் சிக்கியிருக்கிறது. இந்த வறுமை காரணமாகப் பத்தில் ஏழு குடும்பங்கள் குறைபோசாக்குடைய இருவேளை உணவுகளை மட்டும் உண்பதாகவும், கிட்டத்தட்ட ஏழு லட்சம் சிறார்கள் பட்டினி அவலத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் யுனிசெவ் அறிக்கைப்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையின் முதல் உதாரணம்தான் சாந்தியின் அவலக்குரலுக்குப் பின்னால் இருக்கின்றது.
இங்க ஒரே மழை. என்னாலயும் எங்கயும் போக முடியேல்ல. றோட்டுப் போடுறதுக்காக மூடப்பட்ட வாய்க்காலால இந்தக் காணிய விட்டுத் தண்ணி வெளிய போகாமல் இங்க எல்லாம் தேங்கி நிண்டது. இந்த இடமெல்லாம் வெள்ளம். ஒரே குளிர். மகனுக்கு காய்ச்சல் வந்திட்டு. இந்தக் குளிருக்குள்ளயும், மழைக்குள்ளயும் வெறுந்தரையில தான் கிடந்தவன். கீழ விரிச்சுப்போடக்கூட எங்களிட்ட ஒண்டுமில்ல. பிச்சைக்குப் போகாததால சாப்பாட்டுக்கும் ஒண்டுமில்ல.
ஆஸ்பத்திரிக்குப் போவமெண்டால், வேணாம் அம்மா எண்டு சொல்லி என்ர மடியிலயே படுத்திட்டான். பசியால பல்ல நறுநறு எண்டு கடிச்சிக்கொண்டே கிடந்தான். என்ர பிள்ளையளின்ர நிலைய பார்த்து பக்கத்தில இருக்கிற ஆக்கள் கொஞ்சம் சோறு தந்தது. அதை எல்லாருக்கும் உருட்டிக் குடுத்தன். கொஞ்சம் சாப்பிட்டிற்று தங்கச்சிக்குக் குடுத்திட்டான். தனக்கு பல்லு நோகுது என்றான். பிறகு யாரோ ரஸ்க் கொண்டந்து குடுத்தவ. அதில தனக்கு கிடைச்சதையும் சாப்பிட்டு, தங்கச்சிக்குக் குடுத்ததையும் பறிச்சி சாப்பிட்டான். அதுதான் அவன் சாப்பிட்ட கடைசி சாப்பாடு.
பட்டினி
பல்லு நோகுது. வயிறு நோகுது எண்டு சொல்லிக்கொண்டிருந்தவனின்ர தொண்டையில் ஒரே சத்தம். பதினாறு வயசுப் பெடியன். ஒரு குழந்தையப் போல தான் மெலிஞ்சிபோய் இருந்தான். அவ்வளவுக்கு பட்டினி கிடந்து மெலிஞ்சி சின்னதாப் போனான். நான் என்ர தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனன். போற வழியில என்ர கழுத்த இறுக்கிப் பிடிச்சி நெரிக்கத் தொடங்கீற்றான்.
அப்படியே கொஞ்சத்தால மயங்கின மாதிரி போனான். அதில நிண்ட ஆட்டோக்காரத் தம்பி, ரெண்டு பேரையும் ஏற்றி வீட்ட கொண்டு வந்து விட்டது. அதில ஒரு அம்மா சொன்னா பிள்ள செத்துப்போயிற்றான் எண்டு. அதை நம்பித்தான் நான் செய்றது தெரியாமல் வீட்ட வந்தன். இங்க வந்த பிறகு மகனுக்கு உயிர் இருக்கிறதா சில பேர் சொன்னாங்க. திருப்பியும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனன். அங்க போனதும், ஒன்றரை மணிநேரத்துக்கு முதலே மகன் இறந்திட்டார் எண்டு டொக்டர் சொன்னார்.
இவ்வளவு பெரிய அவலம் ஒரு குடும்பத்தைச் சூழ நடந்துகொண்டிருக்கையில் அயலவர்கள் யாரும் உதவவில்லையா என்ற கேள்விக்கும் சாந்தியிடம் வலுவான பதி்ல் இருந்தது. இங்க எல்லாரிண்ட நிலைமையும் இதுதானே. எல்லா நாளும் எப்பிடி எங்களுக்கு சோறு குடுப்பாங்கள். மகனின்ர வயித்தில இருந்து பெரிய ஒரு மண் உருண்டைய எடுத்ததாக ஆஸ்பத்திரியில சொன்னாங்கள். பசி தாங்காமல் என்ர பிள்ளை மண்ணை திண்டிருக்கிறான். செத்தவீட்டுக்கு அயலட்டை ஆக்கள் உதவினாங்கள்.
இண்டைக்கு ரெண்டாம் நாள். பிள்ளைக்கு படையல் வைக்ககூட ஒண்டுமில்ல. காலமயே நாங்க பட்டினிதான். இப்ப கொஞ்சம் முதல் ரஸ்க் ஒரு பக்கெற் வாங்கிதந்தாங்கள். அதை பிள்ளையளுக்குக் குடுக்கத்தான் சுடுதண்ணி வச்சிக்கொண்டிருந்தன். நீங்கள் வந்திட்டிங்கள். எனத் தன் மொத்த அவலத்தையும் சொல்லிமுடித்தார் சாந்தி.
அவசர கால உதவித்திட்டங்கள்
அரசு வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு, அவசர கால உதவித்திட்டங்கள், சீனா, இந்தியா வழங்கும் அவசர உதவிகள் எனப் பலவற்றை செய்கிறது. அந்த உதவிகள் சாந்தியின் குடும்பத்தினருக்கு கிடைப்பதில்லையா என அந்த ஊரில் வசிக்கும் இளைஞர் ஒருவரிடம் கேட்டோம்.
சமுர்த்தி மூன்று மாசத்துக்கு ஒருக்கா கிடைக்கும். அதை வச்சி எவ்வளவு காலத்துக்கு சமாளிக்கிறது? 50 கிலோ அரிசி, தேங்காய் எண்ணெய், பருப்பு எல்லாம் குடுக்கிறதா சொல்றாங்கள். ஆனால் உண்மையில் எங்களுக்கு எதுவும் கிடைக்கிறதி்ல்ல. அதிகாரிமார் தங்களுக்கு வேண்டப்பட்ட ஆக்களுக்குத்தான் குடுக்கிறாங்கள். உண்மையா வறுமைப்பட்ட சனங்களுக்கு பட்டினிதான் மிச்சம். இதுகளுக்கு 12 கோழிக்குஞ்சுகளும், ஒரு கூடும் குடுத்தாங்கள்.
இதுகள் சாப்பிடவே இங்க ஒண்டுமில்ல. கோழிக்குஞ்சுகளுக்கு எங்கயிருந்து சாப்பாடு போடுங்கள். ஆக்களுக்குப் பொருத்தமான வாழ்வாதாரமோ, உதவியோ இங்க குடுக்கப்படுறதி்ல்ல. இதுகளுக்கு காசின்ர பெறுமதி தெரியிறளவுக்குக்கூட படிப்பறிவு இல்ல. எழுதப் படிக்கத்தெரியாது.
ரவுணுக்குள்ள வேலைக்குப் போனால், நாள் முழுவதும் வச்சி வேலைவாங்கிப்போட்டு 100 ரூபா காசும் ஒரு சோத்துப் பார்சலும் குடுத்து அனுப்புவாங்கள். உண்மையில் இதுகளுக்கு ஐநூறு ரூபாய்க்கு எவ்வளவு பொருட்கள் வாங்கலாம், ஆயிரம் ரூபாய்க்கு எவ்வளவு வாங்கலாம் எண்டெல்லாம் தெரியாது.
ஒரு நேரச் சாப்பாட்டுக்கு எதாவது கிடைச்சால் போதும் என்ற நிலையில வாழப் பழகீற்றாங்கள் - எனத் தம் பக்க நியாயத்தைச் சொன்னார் அந்த இளைஞர்.
இந்தக் கதைகள் நீண்டு கொண்டே போக மலையடிவாரப் பக்கமாக பெருமழையும் காற்றும் சோவென கதறிக்கொண்டு வந்தது.
வருவது மழையா, புயலா என நிமிர்ந்து பார்க்கையில் மழையின் உச்சியில் பிரம்மாண்டமாக வடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது புத்தர் சிலை. ஒரு சிங்களவர்கூட வசிக்காத அந்த மலையடிவாரக் கிராமத்துக்கு வந்திருக்கிறார் சனங்களின் பசியறியாத புத்தர். அவரால் ஆக்கிரமிப்பைத் தவிர என்னசெய்ய முடியும்?