வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் பட்டதாரியாகலாம் - பூ.பிரசாந்தன்
மக்களுக்காக தம் உயிரை துச்சம் என மதித்து ஆகுதியாக்க துணிந்த கிழக்கின் தலைவர் சிவ. சந்திரகாந்தனை படிக்காதவன் என்று வசைபாடுவது ஒட்டுமொத்த முன்னாள் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் செயலாகும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் (P.Prasanthan) தெரிவித்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கிய இராஜபுத்திர இராஜமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவான காலத்திலிருந்து தனக்கான கடமைகள் என்ன என்று உணரமாட்டாதவராக இருந்து வருவது வேதனைக்குரியது.
அவருக்கு மக்கள் அளித்த ஆணைக்கு இஞ்சியளவேனும் மதிப்பளிக்க பக்குவமற்றவராய் காலத்தினை வீணடிப்பதை அவதானிக்க முடிகின்றது.
தான் ஒரு கௌரவ உறுப்பினர் என்பதைக் கூட மறந்து, பொய்யான ஆவணங்களை நாடாளுமன்றம் என்னும் உயர்ந்த சபையிலே சமர்ப்பிப்பதும், தெருச்சண்டைக்காரர்களைப் போல இங்கிதமற்ற வார்த்தைப் பிரயோகங்களை உதிர்ப்பதும், அவருக்கு வாக்களித்த மக்களை கொச்சைப்படுத்தும் செயலாகும்.
எமது கட்சித் தலைவர் சிவ.சந்திரகாந்தன் மீது சேறடிப்பதையே தனது நாளாந்தக் கடமையாக கொண்டு செயற்பட்டு வருகின்றார்.
ஒரே மாவட்டத்தில் தெரிவான சக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது அப்படியென்ன இவருக்கு காழ்ப்புணர்ச்சி? எமது தலைவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது. சேறு பூசுதல் ஊடாக எதிர்கொள்ள முனைகின்றார் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கிய இராஜபுத்திர இராஜமாணிக்கம்.
அண்மையில் வெளிநாட்டு தொலைக்காட்சியொன்றில் இவர் கருத்து தெரிவிக்கும்போது¸ எமது கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் கல்வி அறிவு அற்ற “கிணற்றுத் தவளை" என்றும்¸ தான் அவுஸ்ரேலியாவில் “பட்டம் முடித்தவர்" என்றும்¸ தனது “மேட்டுக்குடி பெருமை" பேசியுள்ளார்.
வசதியும் வாய்ப்பும் கிடைத்தால் யாரும் பட்டதாரியாகலாம். ஆனால் மக்களுக்காக போராடுவதற்கு பொதுநல சிந்தனை வேண்டும். அப்படிப் போராடிய ஆயிரமாயிரம் இளைஞர்களில் ஒருவரே முன்னாள் போராளி சிவநேசதுரை சந்திரகாந்தன்.
அவரை “படிக்காதவர்" என்பது அவரை மாத்திரமல்ல¸ முன்னாள் போராளிகள் அனைவரையும் கொச்சைப்படுத்தும் செயலாகும்.
சாணக்கிய இராஜபுத்திர இராஜமாணிக்கம் தனது பேச்சுக்களின் ஊடாக¸ மொழிப்புலமைக்கும், அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை அடிக்கடி ஊர்ஜிதப்படுத்துகின்றார்.
தலைமைப் பண்பு என்பது¸ இப்படி வாய்க்கு வந்த படி பேசித் திரிவதில்லை என்பதை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும்.
சிவ.சந்திரகாந்தன் தமிழரின் உரிமைக்காக தனது உயிரையே துச்சமென மதித்து களம் புகுந்தவர். எமது தேசமும், எமது மக்களும் இரத்தமும் சதையுமாக குற்றுயிராய்க் கிடந்த போது, அதனை எதிர்கொண்டு மக்களோடு மக்களாக வாழ்ந்து எமது மக்களுக்காகவே போராடிய வரலாறு அவருடையது.
இந்த மாகாணத்திலே அமைதியைக் கொண்டு வந்தமையிலும், முப்பது வருடமாக எமது மக்கள் இழந்து கிடந்த இயல்பு வாழ்வை மீளுருவாக்கியதிலும், கிழக்கின் முதலமைச்சராக அவர் வகித்தபங்கு ஊரறியும், உலகறியும்.
சிவ.சந்திரகாந்தன் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய தனது பதினைந்தாவது வயதிலிருந்து பொதுவாழ்வில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் உலகின் எந்தப் பல்கலைக் கழகத்தினாலும் கற்றுத்தர முடியாதவை என்பதனை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
திவிநெகும, சமூர்த்தி போன்றவற்றையிட்டு அவை எவ்வாறு செயற்படுகின்றன? மாகாணசபையின் அதிகார வரம்புகள் எத்தகையன? என்பன பற்றிய பல பாடங்கள் கூட தெரியாது, உளறுவதை சாணக்கிய இராஜபுத்திர இராஜமாணிக்கம் நிறுத்திக்கொள்வதோடு, அதுகுறித்து சிறிதளவேனும் கற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையேல் வாக்களித்த மக்கள் இவ்வாறான அதிகார வரம்பெல்லை தெரியாதவருக்கா வாக்களித்தோம் என்று கவலையடைய வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.
முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மாகாண சபை முறைமையே வேண்டாம் என்று பகிஸ்கரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு மாகாணசபை அதிகாரங்கள் பற்றி கதைப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எமது கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் மீதும், எமது கொள்கைகள் மீதும் நீங்கள் செய்து வரும் சேறடிப்புகள் எம்மை எதுவுமே செய்துவிடப் போவதில்லை.
62 வருட பாரம்பரிய அரசியல் போலி முகத்திரைகளை பார்த்துப் பார்த்து தெளிவடைந்த எம் மக்கள் உங்களது போலி அரசியல் நாடகங்களை நன்கு அறிந்துள்ளனர்.
ஏனெனில் கல்லிலே நார் உரித்து, காற்றிலே சாறு பிழிந்து, எரிமலையில் தீ எடுத்து வளர்ந்தது எங்கள் கட்சி. பலநூறு போராளிகளின் ஆகுதியில் உருவாகியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பதை தம்பி சாணக்கிய இராஜபுத்திர இராஜமாணிக்கமுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.