சூறாவளியாக மாறப்போகும் காற்றழுத்த மண்டலம்! இலங்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது 15.3° வடக்கு அட்சரேகை மற்றும் 89.7° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலை கொண்டுள்ளதாகவும், இந்த அமைப்பு தொடர்ந்து மேற்கு திசையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சூறாவளியாக மாறும் சாத்தியம்
இன்றைய தினத்திற்கான (26.10.2026) காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், இன்று (அக்டோபர் 26) வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு கடல் பகுதிகளில் இருக்கும்போது, இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சூறாவளியாக (cyclonic storm) மாறக்கூடும்.

அதனைத் தொடர்ந்து, இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 27, 2026 வாக்கில் வங்காள விரிகுடாவின் மேற்கு - மத்திய பகுதியில் தீவிர சூறாவளியாக (severe cyclonic storm) வலுவடைய வாய்ப்புள்ளது.
இந்த அமைப்பினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதுமில்லை என்றாலும், இந்த அமைப்பை நோக்கிய காற்றின் ஓட்டம் இலங்கையின் ஊடாகச் செல்வதால், அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழையுடனான காலநிலை
வடக்கு, மேல், சபரகமுவ, தெற்கு, வடமேற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில், பிற்பகல் 1 மணிக்கு மேல் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வட - மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40 - 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க, பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனப்பட்டுள்ளது.

இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam