‘‘கற்பனை செய்ய முடியாத வன்முறை தாக்கங்களிலிருந்து தப்பித்துள்ள இலங்கை’’
இந்திய பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கையுடன் அமெரிக்கா ஆக்கபூர்வமான உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று இலங்கைக்கான வருகை தரவுள்ள அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று புதன்கிழமை நடந்த காங்கிரஸ் விசாரணையின் போது, வெளிநாட்டு சேவை அதிகாரியான ஜூலி சுங், செனட் வெளிநாட்டு உறவுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் இலங்கை மக்கள் உட்பட இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவுகளை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
தாம் இலங்கைக்கான தூதுவர் பதவிக்கு உறுதி செய்யப்பட்டால், தரமான உட்கட்டமைப்பு மற்றும் முதலீடு, வெளிப்படைத்தன்மை, சர்வதேச சட்டம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை மதித்தல், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் தொழிலாளர் தரங்களை கருத்தில் கொண்டு செயற்படுவதற்கு அயராது உழைக்கப்போவதாகவும் சுங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, மனிதாபிமான உதவி, அவசரகால நிவாரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு கருவிகள் என்ற அடிப்படையில் இலங்கைக்கு உதவி வருகின்றது.
ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகத்தைக்கொண்ட இலங்கை, கற்பனை செய்ய முடியாத வன்முறை மற்றும் தொடர்ச்சியான இன மற்றும் மத பிளவுகளின் விளைவாக நடந்த உள்நாட்டுப் போரின் தாக்கங்களில் இருந்து தப்பித்துள்ளது.
இந்த நிலையில்,தாம் தூதுவர் பதவிக்கு உறுதி செய்யப்பட்டால், ஜனநாயகத்திற்கு அவசியமான மற்றும் நமது வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையின் மையமான ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் ஒரு வலுவான சிவில் சமூகத்திற்கு ஆதரவாக தெளிவாகவும், தொடர்ச்சியாகவும் ஆதரவளிப்பதற்கு கடமைப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்க இராஜதந்திரியான ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில்
என்பவற்றில் அமரிக்கா, வலுவான பங்காளிகளாக இருக்க வேண்டும்.
இதனால் அனைத்து இலங்கையர்களும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பின்
நன்மைகளில் பங்கு பெற முடியும் என்றும் சுங் குறிப்பிட்டுள்ளார்.