மகா சங்கத்தினரின் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ச
இந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வருவது தொடர்பாக சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியில், இது குறித்து மகா சங்கத்தினர் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இம்முறை மே மாதத்தில் வந்துள்ள பௌர்ணமி தினங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார்.
பௌத்தர்கள் என்ற ரீதியில், மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டல்களை எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தற்போது நிலவி வரும் சர்ச்சைக்குரிய சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இம்முறை வெசாக் பண்டிகையை வழக்கம் போல் மிகவும் விமர்சையாகக் கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மகா நாயக்க தேரர்கள் கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அது சரியோ அல்லது தவறோ, அதனை நாம் கேள்விக்குட்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மகா நாயக்க தேரர்கள் ஒரு முடிவை எடுத்திருந்தால், நாம் அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும் நாம் சாதாரணமாக வழக்கம் போல் செய்யும் விதமாகவே இம்முறையும் வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவோம் எனுவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.