72வருடமாக நீதி கிடைக்காமையால் சர்வதேசத்திடம் நீதிகோரி போராடுகிறோம் - பா.அரியநேத்திரன்
கடந்த 72வருடமாக இந்த நாட்டில் நாங்கள் நீதியைக் கோரிவருகின்ற நிலையில் அதற்கான எந்த நீதியும் கிடைக்காத ஏமாற்றமான நிலையிலேயே இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி போராடி வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு நீதி வேண்டி முன்னெடுக்கப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்பாக அன்னை பூபதி உயிர் நீத்த இடத்திலிருந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்கள், தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உட்படப் பலர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
எட்டாவது நாளாகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அம்பிகை அம்மையாரின் நீதி வேண்டிய உணவு தவிர்ப்பு போராட்டத்தினை பிரித்தானியா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில் வடக்கு, கிழக்கில் இந்த போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

