மக்களின் கேள்விக்கு எங்களால் பதிலளிக்க முடியவில்லை - பெங்கமுவே நாலக தேரர்
எம்மிடம் வாக்களிக்கச் சொன்னீர்கள், நாங்கள் வாக்களித்தோம், எனினும் எமக்கு தேவையான எதுவும் கிடைப்பதில்லை என நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க முடியாமல் இருக்கின்றோம் என தேசிய உரிமைகள் அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர் (Bengamuwe Nalaka Thera) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தரப்பினராக செயற்பட்டு வரும் தேசிய உரிமைகள் அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக தேரர், சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் தலைவர், அதன் ஒருங்கிணைப்பாளர் மருத்துவ வசந்த பண்டார ஆகியோர் கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் உடன்படிக்கைக்கு எதிராக மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமர் உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் அந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மனுவைக் கையளித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள பெங்கமுவே நாலக தேரர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு மக்கள் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் வாக்களிக்க சொன்னீர்கள், நாங்கள் வாக்களித்தோம், எனினும் எமக்கு தேவையான எதுவும் கிடைப்பதில்லை என எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
ஏன் எங்களை வாக்களிக்குமாறு கூறினீர்கள், நீங்கள் பொய்தானே கூறினீர்கள் என்றும் கேட்கின்றனர். மக்களின் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க முடியாமல் இருக்கின்றோம்.
நடு இரவில் 12 மணிக்கு இந்த உடன்படிக்கை தொடர்பான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். உடன்படிக்கையில் இரண்டு தரப்பினரும் கையெழுத்திட்டனரா அல்லது வாய்மொழி மூலம் இணக்கத்திற்கு வந்தனரா என்பது எமக்கு தெரியாது.
அரசாங்கம் நாட்டுக்கும் அதனைக் கூறுவதில்லை. இவை அனைத்தும் ஒழிந்து பிடித்து விளையாடும் வேலை எனவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாங்கள் தேசத்தை நேசிக்கின்றோம், தேசிய வளத்தைப் பாதுகாப்போம் என்று கூறியே அனைத்து அரசாங்கங்களும் ஆட்சிக்கு வருகின்றன என செய்தியாளர் ஒருவர் நாலக தேரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அவர், இவர்களுக்கு அது பற்றிய உணர்வு இல்லை. பொதுமக்களை ஏமாற்றுவதற்காக அப்படி கூறுகின்றனர்.
பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, அதன் பின்னர் தமக்கு தேவையானவற்றைச் செய்கின்றனர். தற்போதைய அரசாங்கமும் அதே போன்றதுதான் என குறிப்பிட்டுள்ளார்.
