புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக்கைதிகளின் வாக்குரிமையை உறுதிசெய்ய வலியுறுத்தல்
புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்யுறுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் நினைவூட்டல் கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு( Anura Kumara Dissanayake) மீண்டும் அனுப்பவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கைதிகளின் வாக்குரிமை
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றதும் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிறைக் கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரி உத்தியோக பூர்வமான கடிதமொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி மீண்டும் கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜனாதிபதியிடம் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் சிறைக்கைதிகள் ஆகியோரின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரியிருந்தேன்.
எழுத்து மூலமான கோரிக்கை
அப்போது சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியதோடு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இவ்வாறான நிலையில் இந்த ஆண்டில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ஆகவே, விரைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால் குறித்த இரு தரப்பினருக்குமான வாக்குரிமையை உறுதி செய்ய முடியும்.
அந்த வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் குறித்த விடயத்தினை வலியுறுத்தி எழுத்துமூலமான கோரிக்கையை விடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |