ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒழுங்கு வெளியானது
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் ஒழுங்கு தொடர்பான ஊடக அறிவித்தல் இன்றையதினம் (30.08.2024) வெளியாகியுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2024 செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும், வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்புத் தெரிவையும் வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதோடு, அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
செல்லுப்படியான வாக்கு
வாக்காளர் வாக்குச்சீட்டில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரில் அதற்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 என்ற இலக்கத்தைக் குறித்து வாக்கைப் பிரயோகித்தல் வேண்டும்.
அதன் பின்னர் 2 மற்றும் 3 என்ற இலக்கங்களைக் குறிப்பதன் மூலம் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவைக் குறிப்பிட முடியும்.
வாக்குச்சீட்டொன்றில் வாக்காளர் தனது இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்புத் தெரிவுகளை அடையாளமிடவில்லை எனினும் அதில் முறையானவாறு ஒரு வேட்பாளருக்கு அடையாளமிடப்பட்ட வாக்கொன்று காணப்படின் அது செல்லுப்படியான வாக்கொன்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
செல்லுப்படியற்ற வாக்கு
மேற்படி முறைகள் தவிர வாக்காளரின் வாக்களிக்கும் உளக்கருத்து வாக்குச்சீட்டின் மீது இடப்பட்ட ஏதேனும் அடையாளமொன்றினால் தெளிவாகத் தெரிகின்றவிடத்து (உதாரணமாக X மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள போது) அதனை வாக்காளருக்கு அளிக்கப்பட்ட வாக்கொன்றாகக் கருதப்படும்.
வாக்காளரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடியவாறு ஏதேனுமொன்று எழுதப்பட்ட அல்லது அடையாளமிடப்பட்ட வாக்குச்சீட்டொன்று போன்றே கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதத்தில் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச்சீட்டொன்றும் வாக்கெண்ணலின் போது நிராகரிக்கப்படும்.
அதாவது,
1. எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கு அடையாளமிடப்படாதுள்ள போது.
2. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்காக வாக்கு அடையாளமிடப்பட்டுள்ள போது.
3. ஒரு வேட்பாளருக்கு 1 மற்றும் மற்றொருவருக்கு X அடையாளமிடப்பட்டுள்ள போது.
4. இரண்டாவது விருப்புத் தெரிவு அல்லது மூன்றாவது விருப்புத் தெரிவு மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள போது.
5. வாக்காளரை அடையாளம் கண்டுகொள்ளக்கூடியதான ஏதேனுமொன்று எழுதப்பட்டிருப்பின் அல்லது வரையப்பட்டுள்ள போது.
6. 1 தவிர்ந்த வேறு அடையாளமொன்றுடன் 2,3 விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டுள்ள போது.
7. 1,2,3 ஐ விட வாக்கு மற்றும் விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டுள்ள போது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |