அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தாழ்த்தி பேசிய விடயம் கண்டிக்கத்தக்கது! பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர்
வட மாகாண சபையிலே அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பதவி பற்றியும் அவர்களுடைய பணி தொடர்பாகவும் தரம் தாழ்த்தி பேசிய விடயம் கண்டிக்கத்தக்கது என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் க.அனிரன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாண சபையிலே உயர்மட்ட அதிகாரிகள் கலந்துரையாடல் முடிவுற்றதன் பிற்பாடு, பொதுவாக இலங்கையிலே இருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய பதவி பற்றியும் அவர்களுடைய பணி தொடர்பாகவும் தரம் தாழ்த்தி பேசிய காணொளி சமூக வலைத்தளங்களிலே பரவலாக பதிவேற்றம் செய்யப்பட்டு கொண்டு வருகின்றது.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும், இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அதன் அடிப்படையில், எங்களுடைய அகில இலங்கை பட்டதாரி ஒன்றியம் என்கின்ற அடிப்படையிலே இது தொடர்பான விடயங்களை இந்த ஊடக வாயிலாக வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கோடு இன்று இந்த மட்டக்களப்பு ஊடக மையத்திலே இந்த ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அபிவிருத்தி சார்ந்தும் கதைக்கப்பட வேண்டிய அந்த சந்தர்ப்பங்களில் அரசினால் ஒதுக்கப்பட்டிருக்கின்ற பணி நேரத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அந்த நியமனதாரர்களை தரம் தாழ்த்தி பேசுவதோடு மாத்திரமல்லாமல், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது ஒரு வீண், இவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டால் அரசுக்கு இலாபம் என்கின்ற அந்த தேவையில்லாத கேவலமான அந்த விடயங்களை பேசி இருக்கின்றார்கள் இது கண்டிக்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்டார்.