கூட்டணியில் இருந்து வேலுகுமார் வெளியேற்றப்படவில்லை
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் வெளியேற்றப்படவில்லை. அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பவற்றின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்துக்குத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 'தனியார்' வானொலியில் இன்று காலை ஒலிபரப்பாகிய அரசியல் நிகழ்ச்சியில் வேலுகுமார் எம்.பியின் 'நடுநிலை'ப் போக்கு மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இடைநிறுத்தப்பட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கண்டி மாவட்டத்தில் நானும் களமிறங்கினேன். பல சவால்கள் இருந்தன. அவற்றை எதிர்கொண்டேன். இறுதியில் தோல்வி என்பதைவிட தோற்கடிக்கப்பட்டேன். இந்நிலையில், சுமார் 20 வருடங்களுக்குப் பிறகே கண்டி மாவட்டத்துக்குத் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்தது. அந்தப் பிரதிநிதித்துவம் மக்களுக்கு மிகவும் அவசியம்.
அதனை இல்லாது செய்வதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.
வேலுகுமார் சுயாதீனமாகவாவது இருந்துவிட்டு போகட்டும். தமிழ் முற்போக்குக்
கூட்டணியில் இருந்து வேலுகுமார் வெளியேற்றப்படவில்லை. அவர்
இடைநிறுத்தப்பட்டுள்ளார்" - என்றார்.