நாட்டில் மரக்கறி நுகர்வில் பாரிய வீழ்ச்சி
நாட்டில் மரக்கறி நுகர்வில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் மரக்கறி நுகர்வினை 50 வீதத்தினால் குறைத்துக் கொண்டுள்ளதாகவும், மரக்கறி மொத்தவிலை ஸ்திரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் செயலாளர் ஐ.ஜீ.விஜயானந்த தெரிவித்துள்ளார்.
மரக்கறி மொத்த விற்பனை நிலை குறைந்துள்ள காரணத்தினால் கொள்வனவாளர்கள் மரக்கறி வகைகளை போக்குவரத்து செய்வதிலிருந்து விலகிக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மரக்கறி கொள்வனவில் வீழ்ச்சி
எரிபொருள் விலை ஏற்றத்தை தொடர்ந்து மரக்கறி கொள்வனவு செய்ய வருவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு மரக்கறி விலைகள் உயர்வடைந்த காரணத்தினால் மக்கள் தங்களது நுகர்வினை அரைவாசி அளவில் குறைத்துக் கொண்டுள்ளனர்.
ஒரு கிலோகிராம் போஞ்சி 350 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கறிமிளகாய் 450 ரூபாவிற்கும், கரட் ஒரு கிலோகிராம் 100 முதல் 120 ரூபாவிற்கும், லீக்ஸ் ஒரு கிலோகிராம் 220 ரூபாவிற்கும், கத்தரி ஒரு கிலோகிராம் 120 முதல் 150 ரூபாவிற்கும், கோவா ஒரு கிலோகிராம் 30 முதல் 40 ரூபாவிற்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 200 முதல் 230 ரூபாவிற்கும் மொத்த விற்பனையின் போது விற்பனை செய்யப்பட்டுள்ளது.