வவுனியாவில் குளக்கட்டில் மருத்துவ கழிவுகளை வீசியவர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
வவுனியா, வைரவபுளியங்குளம் குளக்கட்டு பகுதியில் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் மருத்துவக் கழிவுகளை வீசிய ஒருவர் அப்பகுதி மக்களால், பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மருத்துவ ஆய்வுகூடம் ஒன்றின் ஊசிகள், இரத்த பரிசோதனைக் கண்ணாடிகள், சிரிஞ், பஞ்சுகள், மருந்து குவளைகள், மருத்துவ சிட்டைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை வைரவபுளியங்குளம் குளத்தின் குளக்கட்டு வீதிப் பகுதியில் நபர் ஒருவர் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் குறித்த கழிவு பைகளை எடுத்து சோதனை செய்த போது அதிலிருந்த சிட்டைகளை மீட்டு, சிட்டையிலிருந்த குறித்த மருத்துவ ஆய்வு கூட இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குளக்கட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர்.
இதன்போது தாம் மருத்துவ கழிவுகளை வீசியதைக் குறித்த ஆய்வுகூடத்தினர் ஏற்றுக் கொண்டதுடன், தாம் வீசிய மருத்துவ கழிகளை மீள எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தில் மருத்துவ கழிவுகளை வீசியமை தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் தமிழ் மொழி முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் குறித்த இடத்தினை பார்வையிட்டதுடன், குறித்த நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதாக அழைத்துச் சென்றுள்ளனர்.






