பின்தங்கிய கிராம வீரர்களை ஏன் ஒதுக்குகிறார்கள்: வவுனியா மேயர் கிண்ணம் தொடர்பில் கழக தலைவர் விசனம்!
வவுனியா மாநகர சபை மேயர் தன்னை அறிமுகப்படுத்துவதற்காக நடத்தவுள்ள மேயர் கிண்ண உதைபந்தாட்ட போட்டியில் பின்தங்கிய கிராம வீரர்களான எம்மை ஏன் ஒதுக்குகிறார்கள் என வவுனியா புதிய சின்னக்குளம் இளம்தென்றல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் சொக்கலீக்கின் நிர்வாக குழு உறுப்பினருமான சிவராசா சசிகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியாவில் இடம்பெறவுள்ள மேயர் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "வவுனியா மாநகர மேயரால் அறிமுகப்படுத்தப்பட்டு மேயர் கிண்ண உதைபந்தாட்ட போட்டி ஒன்று இடம்பெற உள்ளது. இதில் எட்டு அணிகள் பங்கு பற்றுகின்றன.
ஒவ்வொரு அணிக்கும் நான்கு வீரர்கள் வெளி மாவட்ட வீரர்களாக இருக்கின்றார்கள். இது ஒரு பிழையான முறையாக காணப்படுகிறது. நாங்கள் ஒரு பின்தங்கிய பிரதேசத்தில் சிங்கள பிரதேச செயலகத்துக்கு கீழ்ப்பட்டு வருகின்ற கழகம்.
அதைச் சார்ந்த வீரர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை. ஆகவே எங்களுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள் என கேட்டிருந்தேன். ஆனால் எங்களுக்கு எதுவும் தரப்படவில்லை. இறுதியில் எங்களுடைய கழக வீரர்களை கூட விளையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. எங்களுடைய கழக வீரர்களை எடுக்கவில்லை என்பதற்காக நான் கூறவில்லை. 30 கழகங்கள் இருக்கின்றது.
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு
15 வீரர்கள் வீதம் பார்த்தாலும் 450 வீரர்கள் இருக்கிறார்கள். இதில் 300 வீரர்களை பார்த்தாலும் கூட தற்போது 160 வீரர்கள் எடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 32 வீரர்கள் வெளி மாவட்ட வீரர்களாக இருக்கிறார்கள் இதனால் பல வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் வவுனியாவில் 25 வருடங்களாக உதைபந்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
ஒரு நாள் கூட தற்போதைய மேயர் உதைபந்தாட்டம் விளையாடுவதில் காணவில்லை. ஆனால் தற்போது இவர் வவுனியா உதைப்பந்தாட்டத்தை அழிக்கின்றார். மேயர் கிண்ணம் என்பதை உருவாக்கி வெளி மாவட்டத்து வீரர்களை எடுத்து வவுனியா வவுனியா உதைபந்தாட்டத்தை அழிக்கும் செயல். இது ஒரு துரோகத்தனமான வேலை.
பதவிக்கு வந்த முதல் மூன்று மாதங்களையும் நல்லா வேலைகளை செய்தார். ஆனால் தற்போது உதைபந்தாட்டத்தை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பில் மேயரோடு கதைத்த போது, இது தன்னை அறிமுகப்படுத்தும் போட்டி. இதனை குழப்பாதீர்கள் என கூறுகிறார். இரண்டு லீக்கையும் இணைத்து தான் ஒரு போட்டி வைக்கிறேன் என கூறுகின்றார்.
அதை தற்போது செய்வதில் என்ன பிரச்சினை இருக்கிறது. நாங்கள் ஏற்கனவே பின் தங்கிய கிராமத்தவர்கள். எங்களை ஏன் இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆகவே இந்த போட்டியை நிறுத்தி இதற்கான ஒரு தீர்வுவை காணுங்கள் என நான் பலரிடமும் கோரிக்கை வைக்கிறேன். வவுனியா வீரர்களை வளர்க்க வேண்டுமாக இருந்தால் வவுனியா வீரர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கிறது" என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



