வவுனியாவில் மாநகரசபை சுகாதார பிரச்சினை.. வெளியிடப்பட்ட கருத்து
மாநகரசபை சுகாதார பிரச்சினையை சீர் செய்து தரும் வரை இறைச்சிக் கடைகளை பூட்ட தயாராகவுள்ளோம் என வவுனியா மாநகரசபைக்கு உட்பட்ட நகர இறைச்சிக்கடை ஒப்பந்தகாரரான என்.றிசாம் தெரிவித்துள்ளார்.
வவுனியா - குருமன்காடு பகுதியில் இன்று (24.05) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "வவுனியா மாநகர சபையின் கீழ் உள்ள நகர மாட்டிறைச்சிக் கடை ஒப்பந்தகாரர் என்ற அடிப்படையில் நான் மக்களுக்கு சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
கடந்த 5 நாட்களாக மாட்டிறைச்சிக் கடை மூடப்பட்டுள்ளது. அதன் ஒப்பந்த உரிமையாளர் என்ற அடிப்படையில் மக்கள ஏன் கடையை பூட்டியுள்ளீர்கள் என என்னிடம் கேட்கிறார்கள். மாநகரசபைக்கு சொந்தமான மாடு அறுக்கும் மடுவத்தை பல லட்சம் ரூபாய் கொடுத்து குத்தகை அடிப்படையில் தான் நாம் அதனை எடுத்துள்ளோம்.
நகர இறைச்சிக்கடை
கடந்த 5 நாட்களுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அதிகாலை சென்று இருட்டுக்குள் மாடு அறுத்து வேலை செய்ய முடியாததால் நாம் அதனை மூடியுள்ளோம்.
வவுனியா மாநகர ஆணையாளரிடம் சென்று கதைத்ததன் அடிப்படையில் செவ்வாய் கிழமை சீர் செய்து மின் இணைப்பை பெற்றுத் தந்துள்ளார். அதற்கு அவருக்கு நன்றியைக் கூறிக் கொள்கின்றேன். மாநகர சபைக்கு உட்பட்ட மடுவத்தில் அவர்களது சட்ட திட்த்திற்கு அமையவே நாம் தொழில் செய்து வருகின்றோம்.
மாநகர சபை மடுவத்தில் சுகாதாரப் பிரச்சினை என ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் போட்டு எமக்கு வியாபாரம் குறைந்துள்ளது. இவர்கள் நினைக்கிறார்கள் மடுவம் எமது சொந்த இடம் என. எங்களது இஸ்டத்திற்கு மாட்டை அறுத்து கடையில் விற்பதாக நினைக்கிறார்கள்.
அப்படியில்லை. மாநகர சபைக்குரிய சுகாதார பரிசோதகர் மாட்டைப் பார்த்து இறைச்சியை கடைக்கு கொண்டு செல்வதற்கான அனுமதிகளை வழங்கிய பின் தான் கடைக்கு வருகிறது. ஆனால் இவர்கள் மாடுகளை அறுத்து முடிந்த பின் வரும் கழிவுகளை பார்த்து படம் எடுத்து சுகாதாரமில்லை என போடுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.




