ஓமந்தையில் இரு பாரவூர்திகள் மோதி விபத்து: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா - ஓமந்தை பகுதியில் இரு பாரவூர்திகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று அதிகாலை (27) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்து காரணமாக ஏ 9 வீதியின் போக்குவரத்தும் சுமார் 03 மணி நேரம் தடைப்பட்டதுடன், நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நின்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இருந்து யாழ். நோக்கி பயணித்த பாரவூர்தி ஓமந்தை பகுதியிலே பழுதடைந்திருந்த நிலையில் தரித்து நின்றுள்ளது.
இந்நிலையில், பாரவூர்தியினை பழுது பார்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் போது யாழ்.நோக்கி பயணித்த பிறிதொரு பாரவூர்தி குறித்த பாரவூர்தியின் பின் பகுதியில் மோதியதாலேயே விபத்தானது இடம்பெற்றிருந்தது.
குறித்த விபத்தானது அதிக பனிமூட்டம் காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

