புகழ்பெற்ற ஈழத் தமிழ் பாடகர் கனடாவில் மரணம்
'தாயகக்கனவுடன்' என்ற மாவீரர் துயிலுமில்லப்பாடல் உட்பட, பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி திரு வர்ண ராமேஸ்வரன் கனடாவில் உயிரிழந்துள்ளார்.
கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை தந்து மீண்டும் கனடா திரும்பிய நிலையிலேயே அவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
உலகத் தமிழர் மத்தியில் “எங்கே எங்கே ஒரு தரம் உங்கள் விழிகளைத் திறவுங்கள்’ எனக் கேட்கின்ற போதே கண்ணீரை வர வைக்கின்ற துயிலுமில்லப் பாடலான “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” பாடல் ஊடாக இவர் நன்கு பரிச்சயமானவர்.
பல்வேறு வித்துவான்களையும், கலைஞர்களையும் தந்த யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள அளவெட்டி எனும் கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவிளான் எனும் சிற்றூரில் பிறந்த இவர், பின் யாழ்ப்பாணம், வன்னி, கொழும்பு என வாழ்ந்து கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை கனடாவில் வசித்து வந்தார்.
பல்துறைக் கலைஞரான வர்ண ராமேஸ்வரன் அவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக இருந்திருக்கிறார், தென் இந்தியாவில் சென்னையிலும் இசை பயின்றுள்ளார்.
வர்ணம் எனும் இசைப் பள்ளியினையும் கனடாவில் நடாத்தி வந்துள்ளார்.
விடுதலை எழுச்சிப் பாடல்கள் பலவற்றை பாடி மக்கள் இடத்தில் நீங்கா இடத்தைப் பிடித்த இவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.