வலி. மேற்கு பிரதேச சபையின் முன்மாதிரி!
தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள், கோவில்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பொது அறிவித்தல்கள் என்பன மக்களது வீடுகளின் மதில் சுவர்கள் பாடசாலைகளின் மதில் சுவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் பதில் சுவர்களிலும் ஒட்டப்படுவதால் இவ்வாறு விளம்பரங்கள் ஒட்டப்படும் பகுதிகள் அழுக்காகின்றது மட்டுமல்லாமல் அது விசனத்துக்கும் உள்ளாகின்ற நிலைமைகள் ஏற்படுகின்றன.
மதில் சுவர்கள் இவ்வாறு அழுக்கடைவதை தடுக்கும் நோக்கில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையானது ஒரு முன்மாதிரியான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதாவது வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட 7 பொது இடங்களில் இவ்வாறான விளம்பரங்களை காட்சிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விளம்பரங்களை காட்சிப்படுத்த வசதி
அந்தவகையில், சுழிபுரம் சந்தி, வழக்கம்பரை அம்மன் கோவில் அருகாமை, சித்தங்கேணி சந்தி, சங்கரத்தை சந்தி அருகாமை, வட்டுக்கோட்டை, அராலி உப அலுவலகத்துக்கு அருகாமை, அராலி ஐயனார் கோவில் அருகாமை போன்ற இடங்களில் இவ்வாறான விளம்பரங்களை காட்சிப்படுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் இந்த முன்மாதிரியான, பயனுள்ள செயற்பாட்டை மக்கள் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.