மின்சாரம் தடைப்பட்டதால் தடுப்பூசிகளுக்கு பாதிப்பு இல்லை: வெளியான தகவல்
மின்சாரம் சிறிது நேரமே தடைப்பட்டதால் தடுப்பூசிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையினால் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகள் பாதிக்கப்படுமா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது.
இந்தநிலையில், சிறிது நேரமே மின்சாரம் தடைப்பட்டமையினால் குறித்த தடுப்பூசிகளை பாதுகாக்க கூடிய வசதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் உள்ளமையினால் தடுப்பூசிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசிகளுக்கு பாதிப்பு
நேற்றையதினம் (15) வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மின்சாரம் நிலுவை செலுத்தப்படாமையினால் மின் துண்டிக்கப்பட்டதாகவும் நீண்ட நேரமாக மின்சாரம் இணைக்கப்படாவிடின் அங்கு குளிரூட்டியில் வைக்கப்பட வேண்டிய தடுப்பூசிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்கின்ற சந்தேகம் நிலவியது.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் செய்திகளும் வெளிவந்திருந்த நிலையில், இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார வைத்திய அதிகாரி இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாக்க கூடிய வசதி
மேலும் அவர் தெரிவிக்கையில், சுமார் இரண்டு மணி நேரம் மாத்திரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. எம்மிடம் உள்ள குளிரூட்டிகள் 24 மணித்தியாலம் மின்சாரம் தடைபட்டாலும் கூட பாதுகாக்க கூடிய வசதி கொண்டவையாக காணப்படுகின்றது.
எனவே, இங்குள்ள தடுப்பூசிகள் எந்த விதத்திலும் பழுதடைவதற்கு சந்தர்ப்பமில்லை என அவர் தெரிவித்திருந்ததுடன் பொதுமக்கள் எவ்வித ஐயமும் இன்றி குறித்த தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |