சர்வதேச புலனாய்வு பிரிவுடன் இணைந்து அதிரடி காட்டிய இலங்கை அதிகாரிகள்
இலங்கை வழியாக சர்வதேச சந்தைகளுக்குக் கடத்த முயன்ற 21 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களை ஒரு கூட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முறியடித்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட கடத்தல் வலையமைப்பு ஒன்று சர்வதேச சந்தைகளுக்குக் கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில், ஒகஸ்ட் 14 முதல் 29 வரை, வெளிநாட்டுத் தரப்புப் பிரிவு மற்றும் பாகிஸ்தானின் போதைப்பொருள் தடுப்புப் படையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் உளவுத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உளவுத் தகவல்கள்
இதன்படி, பாகிஸ்தானிலிருந்து வந்துகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான கடல்வழி கொள்கலன்களை இலங்கையின் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் (PNB) இடைமறித்ததாக அமெரிக்க தூதரகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது, சவர்க்கார துண்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 463 கிலோகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நாட்டினர் உட்பட பல சந்தேக நபர்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு நிதியளித்து, இரு நாடுகளிலும் உள்ள சமூகங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகடந்த குற்ற அமைப்புகளை ஒழிப்பதில், அமெரிக்கா - இலங்கை கூட்டாண்மையின் வலிமையை இந்த நடவடிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் சர்வதேச போதைப்பொருள் மற்றும் சட்ட அமலாக்க விவகாரங்களுக்கான பணியகம் (INL) மூலம் இலங்கை பொலிஸார் மற்றும் சுங்கத்துறைக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவியின் தொடர்ச்சியாக இந்த ஒத்துழைப்பு அமைகிறது என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO..