இந்தியாவுடனான எல்லை மோதல்: சீனாவின் உரிமைகோரலை எதிர்த்த அமெரிக்கா
இந்தியாவின் - அருணாச்சலப் பிரதேசம் மீதான சீனாவின் உரிமைகோரலை அமெரிக்கா கண்டித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை பேச்சாளர், வேதாந்த் படேல் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘அருணாச்சலப் பிரதேசம் இந்தியப் பகுதியாகும். இந்தநிலையில் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பை மீறும் ஒருதலைப்பட்ச முயற்சியையும் அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது.
உரிமைகோரல் முயற்சி
அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. அத்துடன் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவல் அல்லது அத்துமீறல்கள், இராணுவம் அல்லது பொதுமக்கள் மூலம் பிராந்திய உரிமைகோரல்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை அமெரிக்கா முற்றாக எதிர்த்துள்ளது.
முன்னதாக சட்டவிரோதமாக இந்தியாவால் நிறுவப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்தை தாம் "ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை” என்று சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர் கேர்னல் ஜாங் சியாவோங் வெளியிட்ட கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் பிரதிநிதியின் கருத்து வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்திற்கு சென்று திரும்பியமை அடுத்து சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், சீனா, அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக கூறி வருகிறது, மேலும் அப்பகுதிக்கு ''சஞ்ஞான்'' என்று பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |