நாட்டு மக்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அவசர செய்தி
மோசடி செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
விமானச் சேவையின் பெயரில் இயங்கும் போலியான நடமாடும் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் இடம்பெறக்கூடிய நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கொடுப்பனவு செய்யும் போது அவதானம் தேவை
குறிப்பாக, வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் மற்றும் செய்திகளில் உள்ள இணைப்புகள் மூலம் கொடுப்பனவுகளைச் செய்வதைத் தவிர்க்குமாறு அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள், வங்கி அட்டை இலக்கங்கள் மற்றும் ஏனைய இரகசியத் தகவல்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிகாரபூர்வ கைப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, Apple App Store அல்லது Google Play Store போன்ற முறையான தளங்களை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தகவல்களை உறுதிப்படுத்தல்
விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது அல்லது வேறு பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு மாத்திரம் செல்வதுடன், உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் சேவை வழிகள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் தொடர்பில் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.