தீவிரமடையும் டெங்கு பரவல்! பல்கலைக்கழகங்களை மூடுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
பல்கலைக்கழகங்களுக்குள் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாக (Cluster) அடையாளம் காணப்பட்டால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேசிய மட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை
"தற்போது தேசிய மட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அதேபோல், அதிக அவதானம் மிக்க பல மாவட்டங்களும் பிராந்தியங்களும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை இந்த டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உயர் கல்வி நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாகப் பதிவானால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை மூட வேண்டியேற்படும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உரிய வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.