நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும்: டக்ளஸ் பணிப்புரை
நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) பணிப்புரை விடுத்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மக்களுக்கு தடையற்ற மின்சாரம் இலங்கை மின்சார சபையின் மூலம் நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக நெடுந்தீவு பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டதால் அப்பகுதி மக்கள் குறிப்பாக தற்போதைய அதி வெப்பமான சூழ்நிலையில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க நேரிட்டிருந்தது.
தொழினுட்பக் கோளாறு
இதற்கு இயந்திரங்களில் ஏற்பட்ட தொழினுட்பக் கோளாறுகளே காரணம் என துறைசார் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதையடுத்து துறைசார் தரப்பினருடன் குறித்த தடங்கல் தொடர்பில் தொலைபேசியில் கேட்டறித்துகொண்ட அமைச்சர் சீரமைக்கும் பணிகளை மிக விரைவாக முன்னேடுத்து தடையற்ற மின்சார வழங்கலை உறுதி செய்யுமாறு பணித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது குறித்த மின் பிறப்பாக்கிகள் சீர் செய்யப்பட்டு மின்சார சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், “தற்போது சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் அதி வெப்ப நிலையும் காணப்படுகின்றது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்படும் ஏது நிலைகள் அதிகளவில் உள்ளன.
வாழ்வாதார தொழில் நடவடிக்கை
அதுமட்டுமல்லாது மக்களின் பல்வேறு வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதேவேளை நாடு முழுவது இருளில் மூழ்கிய சந்தர்ப்பங்களில் கூட இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது கிடையாது.
அந்தவகையில் எதுவித தடைகளும் ஏற்படாது வகையில் சேவையை வழங்குவது துறைசார் தரப்பினரது கடமையாகும்.
இதேநேரம் இப்பகுதியில் காற்றலை மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை நிறைவுற்றதும் தடையற்ற மின்சாரத்துடன் குறைந்த செலவிலும் இப்பகுதி மக்கள் மின்சார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |