யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் : சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் கண்டறியப்படாத காய்ச்சல் நிலை பரவி வருவதாக குறிப்பிட்ட சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் ( Kumudu Weerakoon ), இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நோய்த் தொற்றுக்கு உள்ளாவோர்
குறித்த பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் பதிவாகி இருப்பதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 9,000 க்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் இறந்துள்ளனர்.
கடந்த வருடத்தை விட இந்த வருட காலப்பகுதியில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெல் வயல் மற்றும் நீர் தொடர்பான பிற கடமைகளில் அடிக்கடி ஈடுபடுபவர்கள், சுரங்கம் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.
நோய்க்கான அறிகுறிகள்
வாந்தி, தலைவலி, உடல் பலவீனம், சிறுநீரில் இரத்தம், சிறுநீரின் வெளியீடு குறைதல் ஆகியவற்றுடன் அதிக காய்ச்சல், கடுமையான தசைவலி, கண்கள் சிவத்தல் போன்றன எலிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால், விரைவில் சிகிச்சை பெறுவதன் மூலம் நோய் தீவிர நிலையை அடைவதைத் தடுக்கலாம்.
இல்லையெனில் சிறுநீரகம், கல்லீரல், மூளை உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படுவதோடு, உயிரிழப்பும் கூட நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வயல் மற்றும் நீர் தொடர்பான வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சுகாதார அமைச்சினால் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் வழங்கப்படுவதாகவும், அதற்கேற்ப, அவர்களின் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர் ஊடாக உரிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |