அரசிடமிருந்து ஒரு ரூபாய் கூடத் தேவையில்லை - மோடிக்கு அவசர கடிதம் அனுப்பும் தம்மரத்ன தேரர்
அநுராதபுரம் புனித நகர விவகாரங்கள் அட்டமஸ்தானாதிபதி மற்றும் மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படியே முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி தனது வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், யுனெஸ்கோ (UNESCO) மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் ஆலோசனைக் குழுவின் அனுமதியின்றி ஜனாதிபதியாலோ அல்லது அமைச்சரவையாலோ அநுராதபுரம் புனித நகர விவகாரங்களில் தன்னிச்சையாகத் தீர்மானங்களை எடுக்க முடியாது என மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், 2025 ஜனவரி 10ஆம் திகதி யாத்ரீகர்களின் நலனுக்காக 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அனுலா சைத்தியம் தொடர்பான கடிதத்தையும் வழங்கிய போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் நிதி..
ருவன்வெலி மகாசாயவின் மேற்கு வாயில் மற்றும் ஸ்ரீ மகா போதியின் நான்கு திசை வாயில்களும் மூடப்பட்டிருப்பதால் நாட்டுக்கும் தலைவர்களுக்கும் துரதிர்ஷ்டமும் பேரழிவுகளும் ஏற்படுவதாக தேரர் கூறியுள்ளார்.

அத்துடன், மந்திர தந்திரங்கள் மற்றும் சூனியங்களை நம்புவதை விடுத்து, மூடப்பட்டுள்ள வாயில்களைத் திறப்பதே நாட்டின் நெருக்கடிகளைத் தீர்க்கும் வழி என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இலங்கையின் பௌத்த நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கும் மிஹிந்தலையில் கிழக்கு வாயில் மாத்திரமே திறக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மூன்று வாயில்களையும் புனரமைப்பதற்கு அரசாங்கத்திடம் இருந்து தமக்கு ஒரு ரூபாய் கூடத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியுடன் 'மஹிந்த சாய' தூபியை நிர்மாணித்தது போல, இம்முறையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் மக்களை ஒன்றிணைத்து அவற்றை நிர்மாணிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும், அதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை மாத்திரம் அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் தம்மரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.