அநுர அரசாங்கத்திடம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை
தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்றையதினம் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தொடர்ச்சியான போராட்டங்கள்
வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து ,காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியபோதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |